வெளிநாட்டிற்குச் செல்லுதல் என்பது பலரின் வாழ்க்கைக் கனவாகும். நிலவுகின்ற பொருளாதார சூழ்நிலையின் மத்தியில், தமது குடும்பத்திற்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவும், மேலதிக கல்வியைப் பெறுவதற்காகவும், தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை மோசடிக்காரர்களின் வேட்டைக் களமாக மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டாம்.
இன்றைய நிலையில், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறி, மோசடியான முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி, இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
அதன்படி, கீழ்க்கண்ட விடயங்கள் மூலம் அந்த நிறுவனங்களையோ அல்லது நபர்களையோ நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம்:
• அதிக சம்பளத்துடன் கூடிய போலி வாக்குறுதிகள்: எந்தவித அனுபவமும் அல்லது தகுதியும் இல்லாமலே, இலட்சக்கணக்கான சம்பளம் கிடைக்கும் என கூறி உங்களை கவர முயற்சிப்பது.
• சுற்றுலா விசா (Tourist Visa) மூலம் வேலை வழங்கல்: சுற்றுலா விசாவுடன் சென்று பின்னர் தொழில் விசாவாக மாற்றலாம் என கூறுவது, பெரும்பாலும் உங்களை வெளிநாட்டில் சிக்கவைத்து சுரண்டும் முயற்சியாகும்.
• அவசரமாக பணம் கேட்பது: “விசா வந்துவிட்டது, இன்று உடனே பணம் கொடுத்தால் டிக்கெட் எடுக்கலாம்” என கூறி, அவசர முடிவெடுக்க உங்களை அழுத்தம் கொடுப்பது.
• சரியான பதிவில்லாமை: இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வழங்கிய செல்லுபடியாகும் பதிவு இல்லாமல், ரகசியமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்வது.
உங்கள் கடவுச்சீட்டில் (Passport) இருக்க வேண்டியது, மற்றொரு நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கும் செல்லுபடியாகும் முத்திரையே தவிர, உங்களை மோசடியில் சிக்க வைக்கும் ஒரு சிலந்தி வலையல்ல. தவறான நபர்களுக்கு பணம் வழங்கி, உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை அழிவின் விளிம்பிற்கு தள்ளி விடாதீர்கள்.


