இதற்கு முன்னர் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது காணப்பட்ட அரசியல் செல்வாக்கு தற்போதைய அரசாங்கத்தில் இருக்காது என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்தும் போது, அதற்கு அவசியமான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வொன்றை அடுத்த வருடத்தில் தயாரித்து முடிக்க வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறிப்பிட்டார்
குறுங்காலத் தீர்வு ஒன்றின் ஊடாக வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விடை கிடைக்காது என்றும், இயற்கை அனர்த்த நிலைமை என்பது மனிதர்களுக்கு கட்டுப்படுத்த முடியாதது எனவும், அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக நிரந்தரத் தீர்வைத் தேடிக்கொள்ளும் பொறுப்பு காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தற்காலிகத் தீர்வாக கால்வாய்கள், ஆறுகள் மற்றும் வடிகான் கட்டமைப்பு என்பவற்றை சுத்தப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் செயற்பட்ட திட்டத்தின் முன்னேற்றக் கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடல் அண்மையில் (19) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம் பெற்றது. கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குறுங்காலத் தீர்வாக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்புக்களை சுத்தம் செய்யும் திட்டத்திற்காக 19 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி உப வேலை திட்டங்கள் 19 நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவற்றில் 12 திட்டங்கள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.
மேலும் ஏழு உப திட்டங்களை முடிவுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இத்திட்டங்களை முடிவுறுத்துவதற்கான காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும். அச்செயற்பாடுகளை டிசம்பர் 31-ஆம் திகதிக்கு முன்னர் முடிவுறுத்தலாம் எனவும் அந்த அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட மத்திய நிலையத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அவ்வாறே கொலன்னாவை நகர சபை, கொடிகாவத்த முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப் படுத்திய கொலன்னாவை மற்றும் கொடிகாவத்தை முல்லேரியா உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.