மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் அடங்கிய ஒரு தொகுதி நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கி சென்கொங் (Qi zhenhong) மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக "சீனாவின் சகோதர பாசம்" எனும் தொனிப் பொருளின் கீழ் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாட்ட செயலகத்தில் வைத்து குறித்த உலர் உணவு பொதிகள் அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுனரின் வேண்டுகோளுக்கு இணக்க சீன அரசாங்கத்தால் 2000 உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 770 பொதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து இல்ஙகைகான சீன அரசினால் வழங்கப்பட்ட நிவாரண பொதி முதல் கட்டமாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெரிய உப்போடை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தளிக்கப்பட்டது.
இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட சீன இலங்கை சகோதர பாசம் எனும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பொதி ஒன்றின் பெறுமதி 6,500 ரூபா என சீனத் தூதுவர் கீ சென்ஹொங் அவரது உரையின் போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைகான சீனா தூதுவர் கீ சென்ஹொங்க்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நினைவுச் சின்னம் ஒன்றினையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.