புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் நமது பாதுகாப்புப் படைகளை நவீனமயப்படுத்த அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.
மேலும் நமது பாதுகாப்புப் படைகள் பிரத்தியேகமாக அவற்றின் முதன்மை கடமையான நாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்வதோடு, வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், தேவைக்கேற்ற ஆட்சேர்ப்புகளை செயல்படுத்துவதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், ஆட்சேர்ப்பின் போது தரத்தில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பாதுகாப்பு படை கட்டமைப்பை மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலாசாலையில் (NMA) பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் கடற்படை அதிகாரிகளின் அணிவகுப்பில் (Passing Out Parade) பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) ருவினி ரசிகா பெரேராவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
கிழக்கு துறைமுக நகரமான திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படையின் உயர் பயிற்சி மற்றும் உயர்கல்வி கலாசாலைக்கு வருகை தந்த பிரதம அதிதியை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கலாசாலையின் கட்டளைத் தளபதி கொமடோர் ரொஹான் ஜோசப் ஆகியோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, கடற்படை மரபுகளுக்கு ஏற்ப பாதுகாப்பு செயலாளருக்கு சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.
பயிற்சியின் போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற அதிகாரிகளுக்கு பிரதம அதிதியால் இந்த நிகழ்வின் போது பரிசுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாசங்கத்தினர் உட்பட சமயத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், கடற்படைத் பிரதம அதிகாரி, கிழக்கு கடற்படைத் தளபதி, வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புதிதாக அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் உறவினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.