மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் ஏற்பாட்டில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இக் கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியார்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்ததுடன் தொழில் முதலீட்டாளர்கள் எதிர் நோக்கும் சவால் குறித்தும் சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களிடமிருந்து கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது இயந்திரங்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இயந்திரங்கள் கொள்வனவு செய்வதில் உள்ள நிதி சிக்கல்கள், இடவசதி தொடர்பாகவும் சந்தை வாய்ப்பின்மை என பல குறைபாடுகள் இதன் போது முன்வைக்கப்பட்டதுடன், குறித்த குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது தனியார் வங்கிகள் ஊடாக குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கி சுய தொழில் முயற்சியார்களை மேம்படுத்த அமைச்சன் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுய தொழில் முயற்சியாளர்கள் அவர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும் அமைச்சரிடம் காண்பித்தனர்.