கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கயில் :
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பெரும்போகத்தில் அண்ணளவாக எழுபது ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் நெற்செய்கை அழிவு நிலைக்கு சென்றுள்ளன.
அந்த வகையில் மழை வீழ்ச்சி மற்றும் சீரற்ற காலநிலையினால் எமது மாவட்டத்தின் பெரிய குளமான இரனைமடுக்குளம் நான்கு அல்லது ஐந்து தடவைகளுக்கு மேல் வான்பாய்ந்திருந்தது. இதன் காரணமாக நெற் செய்கை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்நிலையில் இதனை மதிப்பிடும் முகமாக கமநல காப்புறுதி சபை, பிரதேச சபை, விவசாயத் திணைக்களம் ஆகிய இணைந்து மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். இவை நேர அட்டவணையின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே, மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி குறித்த குழுவினருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
மாவட்ட ஊடகப் பிரிவு,
கிளிநொச்சி