மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் நேற்று (11.04.2025) மு.ப 10.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
இவ் கெளரவிப்பு நிகழ்வில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்கள் தமது உரையில், மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியானது
03.04.2025 ஆம் திகதி கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது எனவும், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 450 போட்டியாளர்கள் பங்குபற்றியதாகவும், எமது மாவட்டத்திலிருந்து 16 போட்டியாளர்கள் பங்குபற்றி 02 தங்கப் பதக்கங்களையும் 03 வெற்றி சான்றிதழ்களையும் யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுள்ளது மகிழ்வான பெருமையான விடயம் எனவும். அந்தவகையில் வெற்றிபெற்ற சாதனையாளர்களை கெளரவிப்பதன் மூலம் எம்மை மகிழ்விப்பதாகவே அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், போட்டியில் வெற்றி தோல்வி என்பதற்குப் அப்பால் பங்குபற்றுவதே மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டதுடன், அரசாங்க அதிபர் அவர்களுடன் இணைந்தவகையில் நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு துணைநிற்போம் எனக் குறிப்பிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் வரவேற்புரையானது உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன், வாழ்த்துரைகளை பிரதம கணக்காளர் திரு. செ. கிருபாகரன் அவர்களாலும், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேசியப் போட்டியில் குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற திரு.தர்மலிங்கம் சிறிகாந் அவர்களும் தட்டெறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற செல்வி பாலசந்திரன் கிருசிகா அவர்களும் பொன்னாடை போர்த்தியும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் கெளரவிக்கப்பட்டதுடன், ஏனைய வெற்றிச் சான்றிதழ் பெற்ற 03 போட்டியாளர்களும் மற்றும் போட்டியில் பங்குபற்றிய வீரர் வீராங்கனைகளும் கெளரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வில் பங்குபற்றிய வீரர் வீராங்கனைகளின் அனுபவப்பகிர்வும் இடம்பெற்றது.