தற்போதைய காலநிலை காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தின் பராக்கிரம சமுத்திரம், மின்னேரிய, கிரிதலே, கவுடுல்ல மற்றும் மாதுரு ஓயா குளங்கள் உட்பட பிரதான நீர் நிலைகள் அனைத்தும் தற்போது அதிகபட்ச நீர் கொள்ளளவை எட்டி வருவதுடன் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நீர்ப்பாசன திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகள் இரண்டு அடி உயரத்தில் திறக்கப்பட்டு 2800 கன அடி வேகத்தில் நீர் மகாவலி கங்கைக்கு அனுப்பப்படுகிறது.
கவுடுலு நீர்த் தேக்கத்தின் 12 வான் கதவுகள் தலா ஒவ்வொரு அடி திறக்கப்பட்டு 3500 கன அடி வேகத்தில் நீர் கவுடுலு ஓயாவிற்கு செலுத்தப்படுகிறது.
அத்துடன் மின்னேரியா குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டு செக்கனுக்கு 2800 கன அடி வேகத்தில் நீர் அகலவான ஊடாக கவடுலு தேக்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கிரிதல வாவி வினாடிக்கு 800 கன அடி நீர் ஹாத்தமுன் ஓயாவிற்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது அதிக மழை காரணமாக தாழ் நிலங்கள் பலவும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.