கடந்த அரசாங்கத்தில் நாட்டின் புகையிரத சேவை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புகையிரத சேவையில் ஊழல் பாரிய அளவில் இடம்பெற்றுள்ளதுடன், இது மிகவும் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ள அழிப்பாகத் தெரிவித்த அமைச்சர், இந்த அழிவினால் மக்களும் நேர்மையான புகையிரத சேவை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
புகையிரத சேவையில் அதிக வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், சரியான ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யாதுவிடில் புகையிரத சேவை இதைவிட வீழ்ச்சி அடையும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
"புகையிரத சேவை தாமதம் இன்றி செல்ல வேண்டுமாயின் என்ஜின் 70 அல்லது 75 அவசியம். ஆனால் தற்போது எம்மிடம் 44என்ஜின்களே காணப்படுகின்றன. 20 வருடங்களாக எவ்வித பராமரிப்பு வேலைகளும் இடம் பெற்றிருக்கவில்லை. 10 அல்லது 15 வருடங்கள் முறையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளசப்படவில்லை. இவை மிகவும் திட்டமிட்ட அழிவுகள். இந்த அழிவுகளினால் மக்களைப் போல் புகையிரத சேவைப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அரச ஊழியர்களே வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் தான் கடந்த அரசாங்கம் செயற்பட்டுள்ளது. விசேடமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அரசாங்க ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை வழங்குவதற்காக ஊக்குவித்தனர். இதனால் புகையிரத சேவையில் பாரிய ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முறையான ஊழியர் ஆட்சேர்ப்பு இல்லாவிட்டால் புகையிரத சேதைவிடவை இவும் வீழ்ச்சி அடையும் என்றும் அமைச்சர் பிமல் ரத்னாயக்க மேலும் விபரித்தார்.