நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்திற்கு மேலதிகமாக இவ்வருடம் 25,239.73 மெற்றிக் தொன் muricate of potash (MOP) உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உர மானியம் தொடர்பான பிரச்சினை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விவசாய அமைப்புகள் ஊடாக விவசாயிகளின் கருத்துகளை பெற்று, அந்த கருத்துக்களை ஆய்வு செய்து, விவசாயத்துறைக்கு சாதகமான முடிவுகளை எடுத்து, அது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் 95 வீதமான விவசாயிகள் உர மானியத்தைப் பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் 25,000 ரூபா உர மானியம் கட்டாயமாக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.