உஸ்பெகிஸ்தானின் தஷ்கெத் நகரில் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாடு, சர்வதேச உறவுகள், சமூக அபிவிருத்தி மற்றும் ஆளுகை போன்றவற்றில் தாக்கத்தைச் செலுத்தும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கெடுத்துள்ள கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் அடங்கிய அமர்வுகளில் தமது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், மிகவும் அழுத்தமான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை வகுக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் தளமாகவும் இது அமைந்துள்ளது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி மாண்புமிகு ஷவ்கத் மேசியோயெவ், நடைமுறைகளில் முக்கியத்துவமான தருணங்களைக் குறிப்பிட்டதுடன், பாராளுமன்றங்களுக்கு இடையில் உயர் மட்டத்திலான கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சமூக அபிவிருத்தி மற்றும் நீதிக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு கூட்டப்பட்டது. ஏப்ரல் 06ஆம் திகதி நடைபெற்ற பொது விவாதத்தில் உரையாற்றிய இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற முற்போக்கான மாற்றங்களை வலியுறுத்தினார். சமூகப் பாதுகாப்பை விஸ்தரிப்பது, பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவது, இலவசக் கல்வியை நவீனமயப்படுத்துவது, பாலின உள்ளடக்கத்தை மேம்படுத்தல் மற்றும் அரச ஆளுகையை வலுப்படுத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சபாநாயகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். மேலும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டள்ளது போல, ஊழல்கள் தொடர்பில் சகிப்புத் தன்மை இல்லையென்ற பாராளுமன்றத்தின் கடுமையான நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சிகள் நாட்டின் சமூக வளர்ச்சி மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
சமாதானம் மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான நிலைக்குழு அமர்வில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி “பலஸ்தீனத்தில் இருநாட்டுத் தீர்வுகளை முன்னெடுப்பதில் பாராளுமன்றத்தின் வகிபாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரை சமாதானம், பாதுகாப்பு மற்றும் இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடுகளுக்கு இராஜதந்திர தீர்வுகளுக்கான அவசர தேவை குறித்து தற்பொழுது இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களுக்குப் பங்களிக்கும் விதத்தில் அமைந்தது.
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன இம்மாநாட்டில் கலந்துகொண்டதுடன், இவர் நிலைபேறான அபிவிருத்தி குறித்த நிலைக்குழுவில் பங்கெடுத்தார். “நிலைபேறான அபிவிருத்தியில் ஆயுத மோதல்கள் உள்ளிட்ட மோதல்களால் காணப்படும் நீண்டகாலத் தாக்கத்தை குறைப்பதற்கான பாராளுமன்ற உத்திகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மோதலுக்குப் பிந்தைய சமூகங்களில் நீண்டகால சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இலங்கையின் அனுபவங்கள் மற்றும் கொள்கைகளை அவர் இங்கு எடுத்துக் கூறினார்.
எப்ரல் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, சட்டவிரோத சர்வதேச தத்தெடுப்பால் பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்து, ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் இந்த நடைமுறைகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார்.
பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களின் உரிமைகளுக்காக் குரல்கொடுப்பது மற்றும் சர்வதேச தத்தெடுத்தல்முறை நெறிமுறையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்குப் பங்களிக்கும் வகையில் அவருடைய இந்தத் தலையீடு அமைந்தது.
பாராளுமன்ற செயலாளர் நாயகங்களின் சங்கத்தினுடைய கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கலந்துகொண்டதுடன், இயலாமை உடைய நபர்கள் பாராளுமன்றத்தை அணுகும் வசதி தொடர்பில் முன்மொழிவொன்றை மேற்கொண்டார். இலங்கையின் கண்ணோட்டத்தில் பாராளுமன்றத்தின் சபை செயற்பாடுகள் மற்றும் குழு நடைமுறைகளுக்கான அணுகல் குறித்து அவருடைய இந்த முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இயலாமை போன்ற விடயங்களைக் கருத்தில் கொள்ளாது அனைத்துப் பிரஜைகளையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 150வது மாநாடானது பரந்தளவிலான உலகளாவிய பிரச்சினைகள் குறித்த உரையாடலுக்கான ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதுடன், சமாதானம், பாதுகாப்பு மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் இலங்கையின் தூதுக் குழுவினர் கணிசமான பங்களிப்பைச் செலுத்தினர். இந்த மாநாடு 9ஆம் திகதி நடைபெற்ற ஆட்சிக்குழுவின் கூட்டத்துடன் முடிவுக்கு வந்தது.