- வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் சம்பந்தப்பட்ட தூதரகங்களின் ஊடாக.
- குவைத், ஜப்பான், கட்டார் தூதரங்கள்,அவுஸ்திரேலியா மெல்பேர்ன், கனடா டொராண்டோ, இத்தாலியின் மிலான்,டுபாய், கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் ஊடாக இந்த முன்னோடித் திட்டம் முன்னெடுப்பு.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொராண்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள முறைமைக்கு ஏற்ப வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் இந்தச் சான்றிதழ்களை வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாகப் பராமரிக்கப்பட்டு e- BMD தரவுக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆரம்ப கட்டத்தில், e-BMD தரவுக் கட்டமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
இந்தச் சான்றிதழ்கள் 01.01.1960க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் என்பதோடு தரவுக்கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ் பின்னர் திருத்தப்பட்டால், அத்தகைய சான்றிதழ்கள் தரவு அமைப்பில் புதுப்பிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.