ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி இலக்கை அடையும் நோக்கில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் 14 வகையான ஏற்றுமதி பயிர்களை ஊக்குவிப்பதற்காக அவசியமான அபிவிருத்தி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மிளகு, கோப்பி, பாக்கு, கொக்கோ, கராம்பு, சாதிக்காய், ஏலக்காய், வெனிலா, வெற்றிலை, எழுமிச்சை புல், எழுமிச்சை, குடம்புலி, மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற 14 ஏற்றுமதி பயிர்களை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், 82,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் தற்போது இந்தப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தரப்பினர் ஏற்றுமதி பயிர்களுடன் இணைந்த பயிர்களை உற்பத்தி செய்தல் மற்றும் குறித்த துறையில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் 2025 ஆம் ஆண்டிலிருந்து துறையில் ஈடுபட்டுள்ளவர்களை முன்னேற்றுதல் மற்றும் ஊக்குவிப்பதற்காக ஏற்றுமதி பயிர்களின் நிலங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம், ஏற்றுமதி விவசாய பயிர்ச்செய்கையின் போது அதன் உற்பத்தி திறனை முன்னேற்றம் திட்டம், சேதனப் பயிர் உற்பத்தி சான்றுப்படுத்தல் மற்றும் இரசாயன ஆய்வுகூட பகுப்பாய்வுடன் சம்பந்தப்பட்ட பணிகள், சர்வதேச சாதாரண வர்த்தக முறை சான்றிதழ் வழங்குதல், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விவசாயத்துடன் சம்பந்தப் படுத்தக்கூடிய ஏனைய சான்றிதழ்களை வழங்குதல், அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்ப வேலைத்திட்டத்திற்கான வசதிகளை வழங்குதல், நாற்று மேடைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம், ஏற்றுமதி விவசாய பயிர்களை ஆரோக்கியமாக பராமரித்தல் மற்றும் சுற்றுலா கைத்தொழில் மற்றும் இணைந்த ஏற்றுமதி விவசாய பயிர் திட்டம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்களினால் மேற்கொள்ளப்படும் முதலீட்டில் ஆகக்ஞ கூடுதலாக 50% வரை அரசாங்கத்தின் சலுகைகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் விவசாயம், கால்நடை வளங்கள், மணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை பேச்சாளர் வலியுறுத்தினார்.


