நகர்ப்புற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைப் போன்று, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு புதிய வீட்டுத் திட்டங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகளை வழங்குவதன் மூலம், இந்த நாட்டில் வீடற்ற மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் வாழக்கூடிய ஒரு நாடு உருவாக்கப்படும் என்று நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கூறுகிறார்.
கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை தேர்தல் பிரிவில் கட்டப்பட்ட 3 புதிய வீடுகளை பயனாளி வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (15) பங்கேற்று உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
“அனைவருக்கும் வீடு - Cleen Sri lanka ” என்ற கருப்பொருளின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டம், பிரதேச செயலக மட்டத்தில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியாத குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ. 1 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
மக்கள் சார்ந்த அரசாங்கமாக, ஜனாதிபதியின் தலைமையில், அதிக உற்பத்தித்திறனுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிலையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இலக்கு வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்கி, நாடு மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தை நோக்கி இட்டுச் செல்லப்படுவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


