2026 ஜனவரி 26-30 வரை துபாயில் நடைபெறவுள்ள Gulfood சர்வதேச வர்த்தக கண்காட்சியில், இலங்கையின் மிகப்பெரிய கண்காட்சி அரங்கை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை (EDB) காட்சிப்படுத்த உள்ளது.
கண்காட்சியில் பங்கேற்கும் ஏற்றுமதியாளர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வுடன் இணைந்த விசேட ஊடக சந்திப்பு EDB யின் தலைவர் மங்கள விஜேசிங்கவின் தலைமையில் இன்று (09) நடைபெற்றது.
Expo City யில் உள்ள துபாய் கண்காட்சி மையத்தில் 510 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இலங்கைக்காக ஒதுக்கிய அரங்கில், தேங்காய் சார்ந்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மசாலாப் பொருட்கள், தேயிலை மற்றும் உணவுக்கு தயாராக உள்ள பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் 61 முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் இணைந்து கொள்ளவுள்ளன.
உலகின் மிக முக்கியமான சர்வதேச உணவு மற்றும் பான கண்காட்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட Gulfood சர்வதேச கண்காட்சி வலையமைப்பு, புத்தாக்கம் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான முன்னணி தளமாக அதன் மதிப்பை தொடர்ந்து நிரூபித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற Gulfood கண்காட்சி ஐந்து நாட்களில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வர்த்தக பரிவர்த்தனைகளை ஈட்டியதாகக் கூறப்படுகிறது, 129 நாடுகளைச் சேர்ந்த 5,500 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி 144,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தனர்.
Gulfood 2026 இன் 31வது பதிப்பு துபாய் உலக வர்த்தக மையம் மற்றும் துபாய் கண்காட்சி மையம் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுவதுடன், இது இதுவரையிலும் நடாத்திய கண்காட்சிகளிலும் மிகப்பெரிய கண்காட்சியாக அமையும் என்றும் கூறப்படுகிறது.


