இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா, 2025 பிப்ரவரி 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (நாளை) பண்டாரநாயக்க ஞாகபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
ஏற்றுமதித் துறைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் விதிவிலக்கான பங்களிப்புகளைச் செய்த இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக ஜனாதிபதி ஏற்றுமதி விருது காணப்படுகிறது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்த ஏற்றுமதியாளர்களை கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இதுவரை 25 விருது விழாக்களை ஏற்பாடு செய்துள்ளது.
ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்களுக்கு விருது/ நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது, மேலும் விருது பெறுபவர்களுக்கு ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் சின்னத்தை 3 வருடங்களுக்கு சந்தைப்படுத்தல் கருவியாகவும் பயன்படுத்தும் உரிமை உண்டு.