தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானம், ரயில் திட்டம், இரத்தினபுரியில் பல்வகை போக்குவரத்து மையத்தை நிறுவுதல் மற்றும் இரத்தினபுரி நகரைச் சுற்றி மாற்று வழியை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டின் வீதி அமைப்பை அபிவிருத்தி செய்வதனூடாக, பொதுப் போக்குவரத்து சேவைகளை செயற்திறன்மிக்கதாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரத்தினபுரி மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளைத் தெளிவூட்டும் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரிவு மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் கிராமப்புற வீதி அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 'கட்டுமானப் பணிகளின் போது, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, ரயில்வே திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இணைந்து புதுப்பித்த தகவல்களைப் பயன்படுத்தி திட்டங்களைத் திட்டமிடுவதனூடாக, வீண் விரயம் மற்றும் ஊழலைத் தடுத்து, தாமதங்களைக் குறைப்பதனூடாக அபிவிருத்தி இலக்குகளை அடையலாம்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது. அதேபோல், கூட்டு அபிவிருத்தித்; திட்டம் செயல்படுத்தப்பட்டால், தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. எதிர்காலத்தில், அரச சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு தகுதிகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று அவர் கூறினார்.