யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி (வு சந்தி) வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதி மக்களின் பாவனைக்காக 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் (10.04.2025)அதிகாலை 6 மணிமுதல் கட்டுப்பாடுகளுடன் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தியூடாக அச்சுவேலி செல்லும் வீதி திறக்கப்பட்டது. இன்று இரண்டாம் கட்டமாக வசாவிளான் சந்தியிலிருந்து - பலாலி வு சந்திவரையான பாதை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அன்று சனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் பலாலி வீதி விடுவிப்பு தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, வரைபட ரீதியான தெளிவுபடுத்தல் அரசாங்க அதிபர் அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.