இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்தகைமையை முன்னேற்றும் நோக்கில் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் அசிதிசி ஊடகப் புலமைப் பரிசில் திட்டம் இம்முறை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி “அசிதிசி ஊடக புலமைப் பரிசில் திட்டம் - 2025” திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 2015 மே மாதம் 23ஆம் திகதி ஆகும்.
மூன்று வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ள, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் முழு நேரமாக அல்லது பகுதி நேர அடிப்படையில் பணியாற்றும் 18 தொடக்கம் 55 வயதுக்கு இடைப்பட்ட ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் இணையதள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த புலமை பரிசில் திட்டத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.
மேலும், விண்ணப்பிக்கும் பாடநெறி நேரடியாக ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட பாடநெறியாக இருப்பதுடன், விண்ணப்பதாரர் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2025 ஆம் ஆண்டுக்காக ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
ஊடகவியலாளர்களுக்கு இந்த புலமைப் பரிசில் முறை ஊடாக 2 பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், முதல் புலமைப் பரிசில் வழங்கப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்த பின்னர், இரண்டாவது சந்தர்ப்பத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்தப் புலமைப் பரிசில் திட்டத்தின் ஊடாக பட்டம் மற்றும் பட்டப்பின் படிப்பு போன்றவற்றிற்காக ஆக கூடுதலாக இரண்டு இலட்சம் (ரூ. 200,000/-) ரூபாய் நிதி மற்றும் நீண்டகால மற்றும் குறுங்கால சான்றிதழ் கற்கைகளுக்காகவும் ஒரு இலட்சம் ரூபாய் (ரூ. 100,000/-) நிதி வழங்கப்படும்.
புலமைப் பரிசிலுக்காக வாய்ப்புக் கிடைத்த ஊடகவியலாளர்களுக்கு பாடநெறிக்காக செலுத்தப்படும் பணத்தின் ஐம்பது வீதத்தை (50%) பாடநெறி ஆரம்பத்தில் முதல் தவணை ஆகவும், மிகுதி 50% வீதத்தில் 25% வீதத்தை பாடநெறியின் இரண்டாவது தவணையாகவும், மீதி 25% வீதத்தை பாடநெறி பூரணப்படுத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரும் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவினால் விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு புலமைப் பரிசில் பெறுபவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இதற்காக அனுப்பப்படும் சகல விண்ணப்பங்களும் 2025.05.23 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்திற்கு முன்னர் பணிப்பாளர் (ஊடகம்), சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, இலக்கம் 163, “அசிதசி மெதுர”, கிருலப்பண மாவத்தை, பொல்ஹேங்கொட, கொழும்பு 5, எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது www.media.gov.lk அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து நிகழ்நிலை ஊடாக அனுப்ப முடியும்.
“அசிதிசி ஊடகப் புலமைப் பரிசில் திட்டம் 2025” தொடர்பான மேலதிக தகவல்களை 0112513645/ 0112514632 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது மாதிரி விண்ணப்ப படிவத்தை www.media.gov.lk என்ற இணையத் தளத்திற்கு பிரவேசிப்பதனால் பெற்றுக்கொள்ள முடியும்.