Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணைவாக, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கண்டி மாவட்டத்தில் உள்ள பன்வில கெலேபொக்க தோட்டத்தின் தியனில்ல பிரிவில் சுமார் 80 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட 68 வீடுகள் (4 வரிசை வீடுகள்) கடந்த 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
நாட்டில் தேயிலை மற்றும் பிற பெருந்தோட்டத் தொழில்களில் ஈடுபட்டுள்ள மலயக மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக ஓபதாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின ஊடாக, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 150 வரிசை வீடுகளும், பெருந்தோட்டத் துறையுடன் தொடர்புடைய 2200 குடும்பங்களும் பயனடைவார்கள். இந்தத் திட்டத்திற்காக, இலங்கை தேயிலை சபையால் ஒருங்கிணைக்கப்பட்ட, ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் ரூ.112 மில்லியன் நிதி நன்கொடை வழங்கப்பட்டது.


