நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), மற்றும் ஐ.நா.வில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கெளரவ ஜயந்த ஜயசூரியாவுடன் இணைந்து, 2026 ஏப்ரல் 23 அன்று அமெரிக்காவின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி கெளரவ Michael G. Waltz சை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில், ஐ.நா. சமாதானப் பாதுகாப்பு மற்றும் சமாதான கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, ஹய்டியில் அமைக்கப்படவுள்ள குற்றக்குழுக்கள் ஒடுக்குமுறை படை (GSF)யில் இலங்கையின் சாத்தியமான பங்களிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்க தூதுவர் வால்ட்ஸ், ஐ.நா. நடவடிக்கைகளில் இலங்கை தொடர்ந்து வழங்கிவரும் பங்களிப்பை பாராட்டியதுடன், இலங்கையின் பங்கேற்பிற்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், பல்துறை வழங்கல் அலகுகள் (Multi-Role Logistics), கடல்சார் சிறிய படகு அலகுகள் (Maritime Small Boat), மற்றும் கடல்சார் விசேட நடவடிக்கை படை (Maritime Task Force) போன்ற சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய மேலதிக இலங்கை படைப்பிரிவுகளை அனுப்புவதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்பட்டது. படைத்தள தலைமையக அமைப்புகள், திறமையான ஒருங்கிணைப்பு நடைமுறைகள், மற்றும் முக்கிய கட்டளை மற்றும் பணியாளர் பதவிகளில் இலங்கை அதிகாரிகளை இணைத்தல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பொய்ப்பிரச்சாரங்களை எதிர்கொள்ளல், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான தரநிலைகளைப் பின்பற்றுதல், மற்றும் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கான சரிபார்ப்பு மற்றும் பயிற்சி செயல்முறைகளை வலுப்படுத்துதல் ஆகியவை தொடர்பிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்து வெளிநாட்டு பணிகளின் போதும் உயர்ந்த கட்டுப்பாடு மற்றும் தொழில்முறை தரங்களைப் பேணுவதில் இலங்கை உறுதியாக இருப்பதை இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


