.அம்பாறை வைத்தியசாலையில் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு, பாதியில் இடைநிறுத்தப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு (A & E) மற்றும் கேதீட்டரேஷன் பிரிவுகளின் நிர்மாணப் பணிகளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பார்வையிட்டார்.
இந்த இரு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்காக ரூ. 2300 மில்லியன் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக வீதி அமைப்பை மேம்படுத்த 35 மில்லியன் ரூபா செலவில் பணிகளை ஆரம்பித்தல், நவீன வசதிகளுடன் கூடிய நோயாளர் காவு வண்டியும், நடமாடும் ஆய்வுகூட வாகனமும் வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கிராமப்புற அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வசீன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பி.எஸ்.எம். விமலரத்ன, அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்தியர் ரங்க சந்திரசேன உட்பட மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


