SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு

SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு
  • :
இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் நிகழ்வு, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய வளாகத்தில் நடைபெற்றது.

 அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இந்தக் கப்பல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இக்கப்பல், இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர், 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர பாதுகாப்பு கப்பல் தளத்திலிருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

 
இக்கப்பல் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இக்கப்பல் முக்கிய பங்களிப்பை வழங்கும். குறிப்பாக, இலங்கையும் இப்பிராந்தியமும் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சர்வதேச கடல்சார் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இது மிக முக்கியமானதொரு வளமாக அமையும்.
புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் கயான் விக்ரமசூரிய கப்பலை உத்தியோகபூர்வமாக பணியில் இணைப்பதற்கான அதிகாரப் பத்திரத்தை ஜனாதிபதி இதன்போது கையளித்தார்.
 
அதனைத் தொடர்ந்து, கப்பலின் பெயர் பலகை மற்றும் உத்தியோகபூர்வ இலச்சினையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி,கப்பலில் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார். கப்பலின் செயல்பாட்டுத் தயார்நிலை, மற்றும் செயல்பாடுகள் குறித்து கடற்படைத் தளபதி அங்கிருந்தவர்களுக்கு விளக்கமளித்தார்.
அத்துடன் விசேட விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றை பதிவிட்ட ஜனாதிபதி, கப்பலின் பணியாளர்களுடன் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.
 
அமெரிக்க பதில் தூதுவர் ஜேன் ஹோவெல் (Jayne Howell), சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஹவுஸ் (Matthew House), அமெரிக்க இராணுவக் குழுவின் தலைவர் லெப்டினன்ட் கமாண்டர் ரோஸ் லாரி (Ros Lary), உதவி பாதுகாப்பு ஆலோசகர் செத் நெவின்ஸ் (Seth Nevins), கடற்படை ஆலோசகர்
லெப்டினன்ட் கமாண்டர் ஜெசிகா டி மொன்ட் (Jessica De Mont), தூதரகத்தின் தற்காலிக பிரதித் தூதுவர் ஜோ சைல்டர்ஸ் (Joe Childers) மற்றும் முதன்மைச் செயலாளர் கை ஹியூஸ் (Guy Hughes) ஆகிய உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles