சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறிமுறை
2027ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் புதிய சுற்றறிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும்!
16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்தல் அல்லது கட்டுப்படுத்தல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு, சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான புதிய தேசிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், 2027ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதைப் புதிய சுற்றறிக்கைக்கு அமைய மேற்கொவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, சண்முகம் குகதாசன், அஜந்த கம்மெத்தகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிலுஷா லக்மாலி கமகே ஆகியோரால் பாராளுமன்ற சபையில் எழுப்பப்பட்ட வாய்மூல வினாக்களுக்குப் பதிலளிக்கும் போதே, ஜூன் 08, பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,
16 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் சமூக ஊடகப் பயன்பாட்டினால் எதிர்கொள்ளும் மனரீதியான, சுகாதார ரீதியான மற்றும் சமூக ரீதியான தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களை டிஜிட்டல் தளத்தில் பாதுகாப்பதற்கான கொள்கையொன்று தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கள், இலங்கை பொலிஸ், இலங்கை கணினி அவசர பதில் பிரிவு (SLCERT), தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து முதற்கட்டக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இதன் முற்போக்கான நகர்வாக, பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக தேசிய வழிகாட்டல் கோவையொன்றைத் தயாரிப்பதற்கும், 'Brain Health' (மூளை ஆரோக்கியம்) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்டத்திலான கலந்துரையாடலொன்றை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, இணையவழி மூலமாக பிள்ளைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் 'வேர்ல்ட் விஷன்' (World Vision) நிறுவனத்துடன் இணைந்து திட்டமொன்றைத் தயாரித்துள்ளதோடு, அதற்காக (UNICEF) அபிவிருத்தி நிதியத்தின் நிதி அனுசரரணையைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, யுனிசெப் (UNICEF) அமைப்பின் ஒத்துழைப்போடு ஆசிரியர்களுக்கான டிஜிட்டல் திறன் கட்டமைப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள Online Safety மொடியுளின் கீழ் சுமார் 750 பயிற்றுவிப்பாளர்கள் ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 106 தொலைக்கல்வி நிலையங்கள் ஊடாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், பாடசாலை மாணவர்களுக்கான 'Online Safety, Cyber Security மற்றும் Digital Well-being' வழிகாட்டல் கோவை 2026 செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்காக குடும்பங்களை வலுவூட்டும் முன்னோடித் திட்டமொன்றும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துமிந்த குருகே தன்னிச்சையாகத் தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி வருகின்றார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையும் காலப்பகுதிக்குள், பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அமைச்சரவை தீர்மானங்களுக்கு இணங்க, பல நிறுவனங்களின் பங்களிப்புடன் பன்முகக் கூட்டுப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். இப்பொறிமுறையின் கீழ், 'திவியட சவியக்' திட்டத்தின் மூலம் அநாதரவான பிள்ளைகளுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் வழங்குவததோடு, 'அர்த்த' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த அநாதரவானப் பிள்ளைகளுக்காக மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கி வருகின்றோம்.
இதற்கு மேலதிகமாக, பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத பிள்ளைகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுத்தல், பாடசாலை நேரத்தின் பின்னர் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகும் பிள்ளைகளுக்காக ரத்மலானை பிரதேசத்தை மையமாகக் கொண்டு "செனெஹச" எனும் பெயரில் பரீட்சார்த்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல், உடல் ரீதியான தண்டனைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் 2025-2029 தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பிள்ளைகள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் சாட்சியமளிக்கக் கூடிய வகையில், இரண்டு வீடியோ சாட்சியப் பதிவு மையங்கள் கராப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் நிறுவும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன.
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 2027ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதத்திலான புள்ளிக் கட்டமைப்பை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக, 08 வருடங்களுக்கும் மேலாக அரசாங்கக் காணியொன்றில் வசித்து வரும் தரப்பினருக்கும், அதேபோல் 01 முதல் 06 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்தும் மின்சாரம், நீர் அல்லது மதிப்பீட்டு வரிப் பில்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 04 புள்ளிகள் வரை கிடைக்கும் வகையில் புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளில் காத்திருப்புப் பட்டியலுக்குப் (Waitlist) புறம்பாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 50 வீத எல்லைக்குள் தற்காலிகக் காத்திருப்புப் பட்டியலைத் தயாரிக்குமாறு புதிய சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரம், தேசிய அல்லது மாகாணக் கல்விப் பணிப்பாளர்களின் பூர்வாங்க அனுமதியுடன் அதனை 100 வீதம் வரை திருத்தியமைக்க முடியும். அத்துடன், கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வகுப்பறையொன்றில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை குறித்து தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் அதற்குரிய கொள்கை ரீதியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.


