Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்துடனான இணைந்த வகையில் ஸ்தாபிக்கப்பட்ட நிர்மாண மற்றும் கட்டிட (C&D) கழிவு முகாமைத்துவத்திற்கான மீள்சுழற்சி மத்திய நிலையம் நேற்று (08) முற்பகல் ஏகலை கைத்தொழில் பேட்டையில் திறந்து வைக்கப்பட்டது.
Clean Sri Lanka செயலகம் இந்தத் திட்டத்திற்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு உரிய முன்வார்ப்பு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இத்திட்டமானது, இந்நாட்டின் நிர்மாணத் துறையில் நிலைபேறான சுற்றாடல் மாற்றத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
உலகின் மொத்தக் கழிவுகளில் 40% மற்றும் கார்பன் வெளியேற்றத்தில் 25% நிர்மாணத் துறையாலே உருவாக்கப்படுவதுடன், இலங்கையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் இத்தகைய நிர்மாணக் கழிவுகள் நாளொன்றுக்கு சுமார் 300 தொன் சேர்கின்றன.
இதுவரை காலமும் ஒழுங்கற்ற முறையில் அகற்றப்பட்ட இந்த இடிபாடுகள் காரணமாக மண் மாசடைதல், நீர் மாசடைதல் மற்றும் வெள்ள அபாயங்கள் ஏற்பட்டன. எனவே இந்த திட்டத்தின் கீழ் அவை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக பெறுமதிமிக்க மூலப்பொருட்களாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் இயற்கை வளங்கள் அழிவடைவது குறைக்கப்படுவதுடன், நிர்மாணச் செலவுகளையும் கணிசமான அளவு குறைக்க முடியும்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முழுமையான தலையீட்டுடன் செயற்படுத்தப்படும் இந்த மத்திய நிலையத்திற்காக, 350 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்களும் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மணித்தியாலத்திற்கு 200 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட இந்த மீள்சுழற்சி நிலையத்திற்கு மேலதிகமாக, நவீன ஆய்வுகூடம் ஒன்றும் நிர்வாகக் கட்டிடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 150 மில்லியன் ரூபா ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தில் அரச பல்கலைக்கழகங்களின் பொறியியல் பீடங்களை இணைத்துக்கொண்டு, ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து, நிர்மாணத் துறையில் சுழற்சிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தரப்பினர்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக,Clean Sri Lanka செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, Clean Sri Lanka செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில செனரத், Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் (சுற்றாடல்) அஞ்சுல பிரேமரத்ன, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பொறியியலாளர் நெரஞ்சன் பெர்னாண்டோ, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சாருக ஹெட்டியாரச்சி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


