சுற்றுலா விசா அடிப்படையில் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டவிரோதம் என்றும் அவ்வாறு மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் விசா காலத்தை நீடிக்காதிருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது நேற்று (05) அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டிற்கு வருகை தரும் எந்த ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கும் பாதுகாப்பை வழங்குவதே நாட்டின் பொறுப்பு என குறிப்பிட்ட அமைச்சர், நேற்று முன்தினம் அருகம்பை பிரதேசத்திற்கு 20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்ததுடன், அவர்களில் நூற்றுக்கு 20 வீதமானவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர், விமானப்படை, இராணுவம் ஆகியவற்றை சேவையில் ஈடுபடுத்தி உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே நாடொன்றாக விசேட பாதுகாப்பு வழங்குவதற்காக அரசாங்கமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்
அருகம்பை மற்றும் வெலிகம பிரதேசங்களில் சுற்றுலா வீசாவில் நாட்டில் தங்கியுள்ள நபர்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணத்திற்கு அடிமை பட்டுள்ள இலங்கை வர்த்தகர்கள் அவர்களின் பெயரில் வேறு நபர்களுக்கு சட்ட விரோத வர்த்தகம் ஒன்றை மேற்கொள்வதற்கு இடம் அளிக்காது இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் சுற்றுலா பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகம குறிப்பிட்டார்.
அருகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலிய நாட்டவர்கள் அவர்கள் சமய கடமைகளை மேற்கொள்ளும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் பாரிய அளவில் அந்த நாட்டவர்கள் வருகை தரும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸாரின் பொறுப்பு என்றும் அந்நாட்டவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதா என்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனை தெளிவுபடுத்தினார்.


