உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான உலக வங்கியின் குழுவினர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கெளரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் அண்மையில் (25) கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ கபீர் ஹாசிம், வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் குழுக்களின் உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களிலிருந்து இலங்கையின் அபிவிருத்திக்கு உலக வங்கி வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களுக்கு குழுக்களின் தலைவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிக மின்சாரச் செலவுகளைச் சந்தித்து வருவதால், வலுசக்தித் துறையில் உடனடியான மறுசீரமைப்புக்கள் அவசியம் என உலக வங்கியின் குழுவினர் வலியுறுத்தினர். உள்நாட்டின் அபிவிருத்திக்கு துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றங்கள் முக்கியமானவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், அரசாங்கத் துறையிலுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை சீர் செய்து மொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதையும் உலக வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரசாங்கத்துறைப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஊதிய மட்டம் குறைவாகவும் உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தமது குழுக்களின் செயற்பாடுகள் குறித்து குழுக்களின் உறுப்பினர்கள் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர். வருமான சேகரிப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்கம், வறுமை ஒழிப்பு, பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், சுற்றுலா, கல்வி, விவசாயம் மற்றும் தொழில்முனைவு போன்ற துறைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
முழுமையான தனியார்மயமாக்கத்திற்கு மாற்றாகத் திறம்பட செயற்படக்கூடிய அரச-தனியார் கூட்டாண்மைகள் உருவாக்கப்படுவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. நன்கு கட்டமைக்கப்பட்ட அரச-தனியார் கூட்டாண்மைகள் மூலம் சேவை மேம்பாடு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக் குறித்த உலகின் சிறந்த முன்னுதாரணங்களையும் உலக வங்கியின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டனர்.
இலங்கைப் பாராளுமன்றமும், உலக வங்கியும் வலுவான நிறுவனம் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்தி, நிலையான பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்க உறுதிபட செயல்படுகின்றமையைப் பறைசாற்றும் வகையில் இந்தக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இந்தக் கலந்துரையாடலில், உலக வங்கி குழுமத்தின் சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி ஸ்டீபன் மாச்சிங், சர்வதேச நிதி ஒத்துழைப்பின் இலங்கைக்கான சிரேஷ்ட அதிகாரி விக்டர் அந்தோனிப்பிள்ளை, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


