இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை அண்மையில் (02) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
அண்மையில் கனடாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கனேடியப் பிரதமருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சபாநாயகர், கனேடிய மக்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்துடன் கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆறு தசாப்தத்திற்கு மேலாகக் காணப்படும் உறவுகளையும் நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கனடா தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். மகாவலி போன்ற நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கண்ணிவெடி அகற்றல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் இலங்கைக்கு கனடா வழங்கிய உதவிகளையும் சபாநாயகர் நினைவு கூர்ந்தார். பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமைகளின்போதும், கடன் மறுசீரமைப்பின் போதும் கனடா வழங்கிய உதவிகளுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
கனடா பாராளுமன்றத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருவதை சபாநாயகர் பாராட்டியதுடன், இது கனடாவின் பன்முக கலாச்சார சமூகத்தின் பிரதிபலிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும், இனரீதியான, மதரீதியான பிரிவினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். அத்துடன், ஊழலை ஒழிக்கும் விடயத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அக்கறையுடன் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது எனச் சுட்டிக்காட்டிய கனேடிய உயர்ஸ்தானிகர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் இலங்கை - கனடா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கௌரவ சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.