மியன்மாருக்கான இலங்கையின் சிறப்பு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவி அனர்த்த நிவாரணக் குழு, சனிக்கிழமை (ஏப்ரல் 05) யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) மேற்பார்வையின் கீழ், முப்படை உறுப்பினர்களைக் கொண்ட இந்த சிறப்புக் குழு நேற்று நாட்டிலிருந்து மருத்துவப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளுடன் மியன்மாருக்கு புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மியன்மாரிலுள்ள இலங்கை தூதரக தகவல்களுக்கமைய, மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர், யங்கோன் பிராந்திய முதலமைச்சர், யூ சோ தீன், யங்கோன் நகர மேம்பாட்டுக் குழுவின் (மேயர்) தலைவர் யூ போ ஹ்டே, யங்கோன் பிராந்திய சமூக விவகார அமைச்சர் யூ ஹ்டே ஆங், யங்கோன் பிராந்திய பாதுகாப்பு மற்றும் எல்லை விவகார அமைச்சர் கர்னல் வின் டின்ட், வெளியுறவு அமைச்சின் மூலோபாய ஆய்வுகள் மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் ஜெனரல் யூ சாவ் பியோ வின் மற்றும் சமூக நலன், நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ இயக்குநர் யூ தான் சோ உள்ளிட்ட மியான்மார் அரச பிரமுகர்களுடன் விமான நிலையத்தில் இலங்கை குழுவினரை வரவேற்றனர்.
இந்த அவசர உதவியை அனுப்புவதில் இலங்கையின் முன்மாதிரியை யங்கோன் முதலமைச்சர் பாராட்டியாரத்துடன், இலங்கையின் இந்த உதவி இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பின் பிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறினார்.
இந்த நிவாரண குழுவை அனுப்பும் பணிக்கான இராஜதந்திர ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் இலங்கை வெளியுறவு அமைச்சு (MFA) மற்றும் வெளியுறவுச் செயலாளர் முக்கிய பங்காற்றினர்.
இலங்கையின் நிவாரண குழு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிர்வாகத் தலைநகரான நே பி தாவிலிருந்து அனுப்பப்படும்.
கடந்த வாரம் மியான்மர் 7.7 ரிக்டர் அளவுகோலில் பதிவான பாரிய நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.