இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது.
இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் (10_ கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இயலாமையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இயலாமையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது இயலாமையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் இயலாமையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இயலாமையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக இயலாமையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி இயலாமையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் இயலாமையுடைய நபர்களுக்கான தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.