காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில்

காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில்
  • :
 
காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் (14) நடைபெற்றது.

 

காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே அவர்கள், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்கள் தலைமைத்துவத்தில் மிகுந்த அனுபவத்தைப் பெற முடியும் எனக் குறிப்பிட்டார். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவிருக்கும் மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு நாட்டில் வீண் விரயத்தைக் குறைப்பது குறித்த புரிதல் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்ஹ, மாணவர் பருவத்திலிருந்தே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிகாட்டியதோடு, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்தும் விளக்கமளித்தார்.
 
இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா புலத்சிங்கள அவர்கள், பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து மாணவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.
இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின் இறுதியில் காலி சௌவுத்லண்ட் கல்லூரியின் அதிபர் என்.ஜீ.ஆர்.சுமேதா காரியவசம் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles