கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில்

கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில்
  • :
உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்கும் வகையில் கல்வி முறை மாற்றப்படும் - பிரதமர் தெரிவிப்பு

 சட்டத்தை மதிக்காத ஒருவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது – பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டு

கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி செயகலகம் அமைந்துள்ள பழைய பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரின் தலைமையில் அண்மையில் (28) நடைபெற்றது.
கண்டி மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், கல்லூரியும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
 
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கல்வி என்பது வெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல எனக் குறிப்பிட்டார். உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு சுமையாக இல்லாமல் இருக்கும் வகையில் கல்வி முறையைப் படிப்படியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிரதமரிடம் நேரடியாக முன்வைப்பதற்கும் இங்கு வாய்ப்புக் கிடைத்தது.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, சட்டத்தை மதிக்கும் ஒருவர் ஒருபோதும் சட்டமியற்றுபவர் ஆக முடியாது என்று தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பல தசாப்தங்களாக நாட்டின் பாராளுமன்றமாகப் பயன்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சபாமண்டபத்தில் இருந்து இந்நிகழ்ச்சியை நடத்த முடிந்தது மாணவர்களுக்கு ஒரு சிறப்பு மரியாதை என்றும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறித்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஸ்வரன், சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன் கமகே ஆகியோர், பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து சலுகைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் குறித்து மாணவர்களுக்குத் தெரிவித்தனர்.
மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்ததையடுத்து பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் சசிகலா சேனாதீர, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles