கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்
  • :

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் 2025.03.25 ஆம் திகதி இடம்பெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம், ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு உரையாற்றிய பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், தொழிற் சந்தையை மாத்திரம் நோக்காகக் கொள்ளாமல், சமூகத்திற்கு நல்ல தலைமைத்துவத்தை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கக்கூடிய திறமையான இளைஞர்களை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், மாணவர்களுக்கு பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் வாய்ப்பும் இதன்போது கிடைத்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன குறிப்பிடுகையில், மாணவர்கள் அகங்காரத்திலிருந்து விடுபட்டு, தூரநோக்குடன் கூடிய அறிவுடைய தலைவர்களாக வருவதற்கு திடசங்கற்பம் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். பொதுநலத்தை குறிக்கோளாகக் கொண்டு குறைந்த நுகர்வுக்கொள்கை உடைய தலைவர்களாகுவதன் அவசியத்தை சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, நாம் விரும்பும் அழகான நாட்டை உருவாக்க, மாணவர்கள் ஒழுக்கமான பிரஜைகளாக சமூகத்தில் சேர்ந்து தற்போதைய சமூகத்தை மாற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர உரையாற்றுகையில், இம்முறை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், இந்த நாட்டின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மாணவியர் தொடர்ந்து முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஆசியாவில் 5வது இடத்திலும், உலகின் அனைத்து நாடுகளிலும் 166வது இடத்திலும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், "பாராளுமன்றத்தின் பங்கு மற்றும் தேசத்தின் குழந்தைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடத்திலிருந்து மாணவர் பாராளுமன்ற அனுபவத்தைப் பெறுவது மாணவர்களுக்குக் கிடைத்த பெறுமதிவாய்ந்த சந்தர்ப்பமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

மாணவர் பாராளுமன்றம் தொடர்பான "விஷன்" சஞ்சிகையின் நினைவு இதழை ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல இதன்போது பிரதமருக்கு வழங்கிவைத்தார்.

அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவியருக்கு கௌரவ சபாநாயகர் உள்ளிட்ட விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன
மேலும், விஷாகா வித்தியாலயத்தினால் புனித அந்தோணி மற்றும் புனித லுசியா வித்தியாலயங்களில் மாணவர் பாராளுமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் நூலகத்துக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதி சிரேஷ்ட ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, விஷாகா வித்தியாலயத்தின் அதிபர் மனோமி செனவிரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவின் பணிப்பாளர் புத்தினி ராமநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள், விஷாகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]