மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும்

மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும்
  • :
மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும்"
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

 கருத்து முரண்பாடுகளைக் கையாள்வதோடு, மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய மிக முக்கியமானதொரு பண்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 
கொழும்புத் திட்டத்தின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தில் 2026.06.24 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விவாதப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
1951 ஆம் ஆண்டு முதல் இலங்கை உள்ளிட்ட ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் பிராந்திய அரசுகளுக்கிடையிலான ஒரு அமைப்பாக 'கொழும்புத் திட்டம்' கருதப்படுகிறது. அவ்வமைப்பின் முக்கிய செயல்பாடுகளை மையமாகக் கொண்ட மூன்று தலைப்புகளின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆதரவுடன், கொழும்புத் திட்டத்தின் தலைமைச் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவாதப் போட்டியில் கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
போட்டியில் பங்குபற்றிய, வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்த பிரதமர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
 
கொழும்புத் திட்டம் என்பது நாடுகளை ஒன்றிணைத்து உலகத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பெரிய வேலைத்திட்டமாகும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே இது ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு நாடுகள் தங்களுக்குள்ள வளங்களையும் அறிவையும் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன் மூலம் முன்னேற முடியும் என்பதே உலகிற்கு இத்திட்டம் பெற்றுக்கொடுக்கும் செய்தியாகும்.
நீங்கள் விவாதித்த கடல்சார் ஆலோசனை, போதைப்பொருள் தடுப்பு, தலைமைத்துவம் மற்றும் நாட்டின் சுபீட்சம் போன்ற தலைப்புகள் வெறும் புத்தகங்களில் உள்ள கருத்துகள் மட்டுமல்ல. இவை இன்று எமது சமூகத்தில் காணப்படும், நாம் அவசியமாகக் கவனம் செலுத்தித் தீர்வு காண வேண்டிய முக்கியமான பிரச்சினைகளாகும்.
 
அதேபோல், கருத்துப் பரிமாற்றம், விவாதித்தல், மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் நாம் விரும்பாத கருத்தாக இருப்பினும் பொறுமையுடன் செவிமடுத்தல் போன்றவை இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான பண்புகளாகும். இதுபோன்ற விவாத மேடைகள் மூலம் அந்தப் பெறுமதிமிக்க விடயங்களை ஒரே இடத்தில் கற்றுக்கொள்ளக் கிடைப்பதென்பது உண்மையிலேயே சிறந்ததொரு வாய்ப்பாகும்.
 
நீங்கள் அனைவரும் நமது இலவசக் கல்வியின் பலன்களைப் பெறுபவர்களே. உங்களுக்காகப் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைக்காத ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருக்கின்றார்கள். ஆகையினால் முழு நாட்டினது எதிர்பார்ப்பும் உங்கள் மீதே உள்ளது. எனவே, எதைச் செய்தாலும் தனது தனிப்பட்ட வெற்றியைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது, சமூகத்திற்குப் பங்களிக்கும், நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் குடிமக்களாகச் செயற்படும் பொறுப்பு உங்களுக்கு இருக்க வேண்டும்.
ஆகையினால், இன்றைய உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதுவிதமாகச் சிந்திக்கும் மனிதர்களும், புதிய கருத்துகளைக் கொண்ட தலைவர்களும் நமக்குத் தேவைப்படுகிறார்கள். உலகை இப்போது இருப்பதைவிட சிறந்த இடமாக மாற்றக்கூடிய தலைவர்களாக நீங்கள் முன்னேறி வருவீர்கள் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் இலங்கைக்கான நியூசிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கேப்ரியல் ஐசக், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் எல்.கே. வசந்த குமார, கொழும்புத் திட்டத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பெஞ்சமின் பி. ரெய்ஸ், போதைப்பொருள் ஆலோசனைத் திட்டத்தின் பணிப்பாளர் ஒரனுச் சுங்காவனா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நழ்வில் பங்கேற்றனர்.

Related Articles