மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போதைப்பொருள் தடுப்பு செயலனி கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றது.
மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பை மேற்கொள்வதற்கு 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர் கலந்து கொண்டு அவர்களினால் செயற்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினர்.
எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பை மேற்கொள்வதற்கு தேவையான செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை வகுத்ததுடன் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடலும் இதன் போது இடம்பெற்றது.
இதன்போது பிரதேச மட்டத்தில் சிறுவர் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வு மூலம் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் என்பதுடன் சிறார்களை பாதுகாத்து விழிப்புணர்வு வழங்க வேண்டியது எமது கடமையும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.