யானை மனித மோதல் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் (12) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவின் செயற்றிட்டத்தில் ஒன்றான யானை மனித மோதலுக்கு தீர்வு காணும் நோக்கிலும் நாடு பூராகவும் யானை மனித மோதல், அதன் பாதிப்புக்கள் தொடர்பில் தரவுகள் திரட்டப்பட்டு நிலைபேறான தீர்வினை அடையும் நோக்கில் முன்னாயத்த வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வளங்களில் ஒன்றான யானையைப் பாதுகாத்தலும், யானையால் ஏற்படும் மனித உயிரிழப்பை தடுக்கும் நோக்கிலும், யானையால் ஏற்படும் பாதிப்புக்கள் அழிவுகளை கட்டுப்படுத்திடும் நோக்கிலும் குறித்த கலந்துரையாடலானது பல்வேறு துறைசார்ந்த திணைக்களங்களுடன் முன்னாயத்த கலந்துரையாடலாக அமைந்தது.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்), மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயக்காந்(காணி) , வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர், மாவட்ட வனவளத் திணைக்களத்தின் அதிகாரி, பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகள், விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள், சிவில் மற்றும் இரணுவ அதிகாரிகள், பிரதேச சபைத் தவிசாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


