முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி யாழ்ப்பாணத்தில்

முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி யாழ்ப்பாணத்தில்
  • :
தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்படுகின்ற 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி, யாழ்ப்பாணம், கொக்குவில், தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த 2025 ஒக்டோபர் 30ம் திகதி கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன், அதன் தென்மாகாண நிகழ்வு 2025 நவம்பர் 20ம் திகதி தங்கல்லையில் இடம்பெற்றது.

 
தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களை ஒழிப்பதன் அவசியம் குறித்து வட மாகாண மக்களை அறிவுறுத்துவதும், 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசேட பணிகள் குறித்து தெளிவுபடுத்தி வட மாகாண மக்களினதும், அதனுடன் தொடர்பான ஏனைய தரப்பினரதும் பங்களிப்பினை இந்த திட்டத்திற்காக பெற்றுக் கொள்வதுமே ஜனவரி 16ம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண வேலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.
 
நச்சுப் போதைப்பொருட்களை ஒழிக்கும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது பல முக்கிய செயற்பாடுகள் குறித்து பிரதானமாக கவனம் செலுத்தப்படுகின்றது. நச்சுப் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், நச்சுப்போதைக்கு அடிமையானவர்களுக்கு முறையான புனர்வாழ்வு அளித்தல், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக முழு சமூகத்தையும் தயார்ப்படுத்தும் வகையில் அவர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்தல், தொடர்புடைய அரச நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒரு பொதுவான குறிக்கோளுக்காக ஒன்றிணைந்து செயற்படுதல் மற்றும் நச்சுப் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் பணியில் இணைந்ததான பிரச்சார நடவடிக்கைகள் ஆகிய பிரதான பணிகள் இதற்கு இணையாக செயற்படுத்தப்படுகின்ற செயற்பாடுகளாகும்.
பொலிஸ் ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி 2025.10.30ம் திகதியிலிருந்து 2026.01.13 வரையான காலப்பகுதியில் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நச்சுப் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை 69,960 ஆகும். இதன் கீழ் 69,318 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றுள், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1,446 ஆகும். 58 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்களை வைத்திருத்தல் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை நச்சுப் போதைப்பொருள் பாவனைக்காக கைது செய்யப்பட்ட 1,384 பேர் புனர்வாழ்வளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
நச்சு போதைப்பொருள் பரவலால் ஏற்படும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சீரழிவைத் தடுக்கவும், சமூகப் பாதுகாப்பை உருவாக்கவும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

Related Articles