முதியோருக்கான தேசியக் கொள்கை (2025-2035) ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்படும் - இறுதிக் கொள்கை சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

முதியோருக்கான தேசியக் கொள்கை (2025-2035) ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்படும் - இறுதிக் கொள்கை சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை
  • :

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் உலக முதியோர் தினத்துடன் இணைந்த வகையில், இலங்கையில் முதியோருக்கான தேசியக் கொள்கையை (2025-2035) வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது அந்தக் கொள்கை பரிசீலிக்கப்பட்டது.

 

இங்கு கருத்துத் தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள், இந்தக் கொள்கையை தயாரிக்கும் பணி 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமான வகையில் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களையும் சர்வதேசக் கொள்கைகளையும் ஆய்வு செய்து இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2012 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, 12.4% ஆக இருந்த நாட்டின் முதியோர் சனத்தொகை 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 18.3% ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தரவுகளைச் சமர்ப்பித்துக் குறிப்பிட்டனர். அதற்கமைய, 2040 ஆம் ஆண்டளவில் இலங்கையின் முதியோர் சனத்தொகை 25.04% வரை உயரும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, இந்தத் தேசியக் கொள்கை மூலம் அந்தச் சமூகப் பிரிவினருக்கான உரிய கவனிப்பையும், பாதுகாப்பையும் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டின் முதியோர் சமூகத்தின் நலனுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கையைப் பாராட்டியத்துடன், கீழ்மட்ட அளவில் இதனை நடைமுறை ரீதியாக செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதற்காக ஒரு முறையான பொறிமுறையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்திய குழுவின் தலைவர், அதற்குத் தேவையான ஆதரவை குழுவின் ஊடாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சூனா, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

Related Articles