நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
  • :

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2026 ஜனவரி 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு திருகோணமலைக்கு வடக்கு - வடகிழக்காக ஏறத்தாழ 100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று முற்பகல் 5.30 மணியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது இன்று நண்பகலளவில்
திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக  அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,  காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பு முதல் மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related Articles