கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கமைவாக “சுத்தமான கடற்கரைகளை கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களாக மாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்வு நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு பாசிக்குடா கடற்கரையில் "நாடு முழுவதுமுள்ள கடற்கரைகளைச்சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்" இன்று காலை இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜென்றல் ஜனக பல்லேகும்பர கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்ந், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.ஜீ.எஸ்.சஞ்ஜீவ, கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஷிஹான் டிலங்க, கல்குடா பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எம்.ஏ.றஹீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர் கே.திலீப்குமார், கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்குடாவுக்குப் பொறுப்பான முகாமையாளர் எம்.எச்.எம். மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடற்கரையோரங்களில் காணப்பட்ட சுழலை மாசுபடுத்தும் பிலாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி துண்டுகள், மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.


