பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் 

பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் 
  • :

இலங்கை போன்ற நாடுகளுக்கு, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறையை நீக்குவதற்கும் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியம்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஆலயம், ஐ நா பெண்கள் அமைப்பு மற்றும் கிரிசாலிஸ் அமைப்பு (Chrysalis) ஆகியன மார்ச் 25 ஆந் திகதி கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ’அவளுக்காக ஒன்றுபட்டு வளமுறுவோம்: இலங்கையில் தாங்குதிறனை கட்டியெழுப்புதல், உள்ளடக்கியதன்மை மற்றும் சமத்துவத்திற்கான குரல்கள்’ (’THRIVE- Together for Her: Resilience-building, Inclusivity, and Voices for Equality in Sri Lanka’ ) திட்டத்தின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

THRIVE என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, ஐ நா பெண்கள் அமைப்பு மற்றும் கிரிசாலிஸ் அமைப்பு (Chrysalis) ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து ஆண்டு திட்டமாகும். இந்த திட்டம், இலங்கையில் ஐ.நா. அமைப்பின் பணிகளை வழிநடத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்தாலும் ஐக்கிய நாடுகள் சபையாலும் இணை கைச்சாத்திடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. பேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்பு சட்டகம் 2023-2027 இன் "பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல்" என்ற 6வது விளைவை அடைந்துகொள்வதற்கு பங்களிக்கிறது.

மன்னார், கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் கொழும்பு ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் தோட்டத் துறையில் உள்ள பெண்களை இலக்காகக் கொண்டு, நெருக்கடிகள், பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்து மீள்வதற்கும், விளிம்புநிலை பெண்களின் பொருளாதார மற்றும் சமூக தாங்குதிறனை வலுப்படுத்துவதன் மூலம், இலங்கையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கும் கட்டமைப்பு மற்றும் மனப்பான்மை மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

"இலங்கை மானிட அபிவிருத்தி குறியீட்டில் உயர்ந்த இடத்தில் உள்ளது, கல்வியறிவு விகிதம் 92% ஐ விட அதிகமாக உள்ளது, மேலும் பல்கலைக்கழக மாணவர்களில் 60% க்கும் அதிகமானோர் பெண்களாவர். இருப்பினும், 35% பெண்கள் மட்டுமே சம்பளம் பெறும் தொழிற்படையில் பங்கேற்கின்றனர். வேலை வாய்ப்புகள் மற்றும் சம ஊதியம் மூலம் பெண்கள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான வழிகளையும் வாய்ப்புகளையும் கண்டடைவது அவசியம், சம்பளம் இல்லாத வேலை மற்றும் சம்பளம் இல்லாத பராமரிப்பு வேலைகள் பெரும்பாலும் பெண்களால் விகிதச் சமமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இலங்கை பாராளுமன்றம் 2024 இல் பெண்கள் வலுவூட்டல் சட்டத்தை நிறைவேற்றியது, இதில் பெண்களின் உரிமைகளை மேற்பார்வையிடுவதற்காக ஒரு சுயாதீன தேசிய ஆணைக்குழுவை நிறுவதல், பெண்களுக்கான தேசிய நிதியமொன்றை உருவாக்குதல் என்பனவும் அடங்கும். ஆணையாளர்களை நியமிப்பதற்கான நிர்வாக செயன்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு அரசாங்கமாக, தேசிய வரவு செலவுத்திட்டத்தின் கீழ் மகளிர் மற்றும் இளம் பெண்களுக்கு பல சலுகைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். கல்வி அமைச்சர் என்ற முறையில், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி வய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இலவச சீருடைகள், காலணிகள், சுகாதார வசதிகள், உணவு, புத்தகங்கள் மற்றும் உதவித்தொகை வழங்குவதற்கும், பொருளாதாரத் தடைகள் காரணமாக எந்தக் பிள்ளையும் பாடசாலையை விட்டு இடைவிலகாதிருப்பதற்கும் நிதி ஒதுக்கியுள்ளோம் என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும்.

எவ்வாறாயினும், 90% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என்பது புள்ளிவிபர ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் இலங்கையின் உலகளாவிய பாலின இடைவெளிச் சுட்டெண்146 நாடுகளில் 122 இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, இது பாலின பாரபட்சம் என்பது பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல என்பதை குறிக்கிறது. இது பாலினம், இனம், மதம் மற்றும் வயதை கடந்த ஒரு சமூக சவாலாகும்.

மேலும், புதிய அச்சுறுத்தல்களும் உருவாகி வருகின்றன. டிஜிட்டல் கருவிகள் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரும் ஆற்றலை வழங்கினாலும், பெண்களை மௌனமாக்குவதற்கும், சார்பியங்களை அதிகரிப்பதற்கும், துன்புறுத்தலைத் தூண்டுவதற்கும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாலினம், இனம், மதம் அல்லது வயதைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் டிஜிட்டல் யுகத்தில் வளம்பெறுவதற்கான சம வாய்ப்புகள் உள்ள ஒரு உள்ளடக்கிய டிஜிட்டல் வெளியை உருவாக்குவது அவசியம். பாலின டிஜிட்டல் பிளவை நீக்குவதற்கும், பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள், டிஜிட்டல் பொருளாதாரத்தில் சுயாதீனமாக பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

பாலின சமத்துவமின்மை என்பது ஒரு பெண்கள் பிரச்சினை அல்ல, இது கொள்கை மாற்றம், கல்வி, மனப்பான்மை மற்றும் நடத்தை மாற்றம் ஆகியவற்றை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. இலங்கை போன்ற நாடுகளுக்கு, அனைத்து பெண்களுக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள எதிர்காலத்தை உருவாக்குவதில் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியமாகும். ”

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ்; ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. மகளிர் பிரதி பிராந்திய பணிப்பாளர் மரியா ஹோல்ட்ஸ்பெர்க்; ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரூ ஃபிராஞ்ச்; மற்றும் அதிதிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]