• கோப், கோபா உள்ளிட்ட நான்கு குழுக்களால் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை ஆராய்வதற்கு முன்னுரிமை
பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள், பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் அவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாயணக்கார தலைமையில் அண்மையில் (21) முதற் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகளில் நடைமுறைப்படுத்தப்படாதவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விதப்புரைகள் எவை என்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் குழுக்களால் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை ஆராய்வது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.
இந்தக் கலந்துரையாடலில், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) மற்றும் பொது மனுக்கள் பற்றிய குழு ஆகிய நான்கு குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகளில் நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளுக்கு முன்னுரிமை அளித்து மதிப்பாய்வை மேற்கொள்ள குழு தீர்மானித்தது.
இதற்கமைய, குறித்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, குழுவினால் வழங்கப்பட்ட விதப்புரைகளை விரைவில் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இக்குழுவின் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வடகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித்.பி பெரேரா, ஓஷானி உமங்கா ஆகியோரும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.