இரண்டு தூதுவர் பதவிகளுக்கும் ஒரு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்ட நியமனங்களுக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இவ்வாறு ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய, எத்தியோப்பியா கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவராகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் நிர்மலா இந்துமதி டயஸ் பரணவிதான அவர்களை நியமிப்பதற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராசிரியர் மொஹமட் இப்ராஹிம் பஸீஹா அஸ்மி அவர்களை நியமிப்பதற்கும் இக்குழு அங்கீகாரம் அளித்தது.
இதற்கு மேலதிகமாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கே.ஏ. விமலேந்திரராஜா அவர்களின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
- இலங்கை பாராளுமன்றம்


