போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் உபகரணங்களை இறக்குமதி செய்வதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்
  • :
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள்
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

 =பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.

 
போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
 
இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
 
இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர்.
 
இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
 
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles