புதிய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும் பிற நன்மைகளை வழங்குவதில், பாரபட்சம் பாராமல் நியாயமாக செயல்படுவது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் ஜூலி சங் (Julie Chung) தனது பாராட்டைத் தெரிவித்தார்.
அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று (25) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற போதே தூதர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் எதிர்காலங்களில் தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற துறைகளில் செய்ய வேண்டிய புதிய விடயங்கள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தூதர் வலியுறுத்தினார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு மலையக சமூகம் பெரும் பலத்தை அளித்துள்ளது என்றும், அரசாங்கம் என்ற வகையில் அந்த மக்களுக்கு இழக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்க முழுமையாக தலையிடுவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வாக்குகளை வாங்குவதற்காகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதிகள் அளித்தாலும், பின்னர் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது வருந்தத்தக்கது என்று ஜூலி சங் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், 76 ஆண்டுகளாக மலையக மக்கள் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இனி அவ்வாறு நடக்காது என்றும் கூறினார். மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) ஆபத்துக்குள்ளான மற்றும் ஆபத்துக்குள்ளாகக்கூடிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். அதேபோல கடந்த காலங்களைப் போலல்லாமல், இந்த வீடுகள் வழங்குதல் மற்றும் கட்டுமானத்தில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது என்றும், அதன் முழு தலையீடு மற்றும் மேற்பார்வை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அமெரிக்க தூதர் தனது பாராட்டைத் தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.