புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பேரிடர் நிவாரணத்திற்காக அரசாங்கத்தினால் 7390 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு: 237,000 க்கும் மேற்பட்டோர் பயனாளிகள்

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பேரிடர் நிவாரணத்திற்காக அரசாங்கத்தினால் 7390 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு: 237,000 க்கும் மேற்பட்டோர் பயனாளிகள்
  • :
புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பேரிடர் நிவாரணத்திற்காக அரசாங்கத்தினால் 7390 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு: 237,000 க்கும் மேற்பட்டோர் பயனாளிகள்

 புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சொத்து இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும் அரசாங்கம் இதுவரை 7,392.95 மில்லியன் ரூபா பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்ட நிவாரணத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் (30) புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

"மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் முன்னுரிமை" - அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன
 
இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பேராசிரியர் சந்தன அபயரத்ன, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நிதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
 
"மா ஓயா, தெதுரு ஓயா, மீ ஓயா மற்றும் கலா ஓயா ஆகிய நான்கு ஆறுகளும் வான்பாய்ந்ததால் புத்தளம் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதிகாரிகள் திரைக்குப் பின்னால் பாரிய அளவிலான பணிகளைச் செய்துள்ளனர். இதுவரை 90,820 குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக மாத்திரம் 2,270.50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 36,566 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு உபகரண சேதங்களுக்காக 1,828.30 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது," என அமைச்சர் தெரிவித்தார்.
 
கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். 48,107 மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 15,000 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 45,443 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தலா 10,000 ரூபா வீதம் உதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்காக மாத்திரம் சுமார் 1,200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
 
விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில்: "நெற்செய்கை பாதிக்கப்பட்ட 7,161 விவசாயிகளுக்கு 744.21 மில்லியன் ரூபாவும், காய்கறிச் செய்கை பாதிக்கப்பட்ட 6,588 விவசாயிகளுக்கு 607.26 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு 313 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது கல்பிட்டி, ஆனமடுவ, சிலாபம் போன்ற பகுதிகளில் உள்ள காய்கறி விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என நம்புகிறோம்."
 
மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் 10 பிரிவுகளில் இந்த நிவாரணத் திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார். இதுவரை 237,244 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது முதற்கட்ட நிவாரணப் பணி மாத்திரமே என்றும், முதற்கட்டத்தில் இழப்பீடு பெற முடியாதவர்களுக்கு மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் நிவாரணங்கள் வழங்கி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இதற்காக முப்படைகள், பொலிஸார், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.

Related Articles