புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் பல கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு – சரியான பொறிமுறையை தயாரித்து சட்டத்தைத் திருத்துமாறு கோப் குழு அறிவுறுத்தல்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் அரசாங்கத்திற்கு பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) அண்மையில் தெரியவந்தது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (12) கூடியபோதே இந்த விபரம் வெளியாகியது.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்குத்தொடுவாவ தோட்டத்தில் மணல் அகழ்வுக்காக தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரையில் பணியகத்தினால் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்த காரரினால் 36531 முதல் 45561 கியூப் வரையிலான மணலை அகற்றியுள்ளபோதும், 1564 கியூப் மணலுக்கு மாத்திரமே அரசுரிமையாக ரூ.686,464 ரூபா செலுத்தப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.எம்.பி டெக்னிகல் சேர்வயர் (தனியார்) நிறுவனத்தினால் 2024 டிசம்பர் 19ஆம் திகதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மணலின் அளவு மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைய ரூ 12 மில்லியனுக்கும் அதிகமான அரசுரிமை இழக்கப்பட்டிருப்பதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், கருங்கல்லை உடைக்கும்போது கல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள வெடிபொருட்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு குறித்த கல்குவாரிக்கான அரசுரிமை அறவிடப்படுகின்றமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அகற்றப்படும் கருங்கல்லின் உண்மையான அளவைக் கணக்கிட முடியாது என்றும், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுகிறது என்றும் குழு சுட்டிக்காட்டியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கருங்கல் குவாரிகள் மூலம் கருங்கல் பெரிய அளவில் உடைக்கப்பட்டாலும் அரசுக்கு சிறிய அளவு வருமானம் மட்டுமே கிடைக்கிறது என்பதை குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு அமைய அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது மாத்திரமன்றி, அதனை கண்காணிப்பதற்கு வலுவான பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோப் குழு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளை வலியுறுத்தியது.
கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்கு முன்னர் ஆய்வு அனுமதிகளை வழங்குவதற்கான பொறிமுறையில் உள்ள கடுமையான குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய அமைப்பின் கீழ் ஆய்வு அனுமதிகளைப் பெறும் பல நிறுவனங்கள் அந்த அனுமதிகளை மற்ற நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உண்மையில் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரியவந்தது. ஆய்வுக்குப் பின்னர் தரவு பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதன் துல்லியத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 1993 முதல் பணியகம் 450 க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கு அனுமதிகளை வழங்கியுள்ளது என்றும், அவற்றில் 43 தற்போது செயற்பாட்டில் உள்ளன என்றும் தெரியவந்தது.
இதற்கு அமைய தற்பொழுது காணப்படும் நடைமுறையின் ஊடாக சரியான முறையில் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்றும், இந்நாட்டின் கனிம வளங்கள் குறித்த ஆய்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு முறைமை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்படி, மேலோட்டமான தீர்வுகளுக்குப் பதிலாக, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு புதிய வழிமுறை மற்றும் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மன்னார் தீவில் கனிம மணல் அகழ்வு தொடர்பில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு 9 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 10 – 13 வருடங்களுக்கு மேலாக இந்த நிறுவனங்கள் கனிம மணல் உள்ள பகுதிகளைக் கண்டறியாமல் உள்ளமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட இந்த 5 நிறுவனங்களும் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் நீண்ட காலமாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் குறித்த பகுதியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் கனிமங்களை ஆய்வுசெய்ய விரும்பும் பிற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக 195 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தடைப்பட்டுள்ளதாகவும், அது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்திற்கு அமைய கனிம மணல் ஆய்வுகளின் பின்னர் கனிமம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கின்றபோதும் 2025 ஓகஸ்ட் 11ஆம் திகதியாகும் போது 3150 அனுமதிப்பத்திரங்களுக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் பணியகம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கனிம அகழ்வுக்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது புனரமைப்புக்குப் பாதுகாப்புக் கட்டணம் அறவிடப்படுகின்றபோதும், புனரமைப்புக்குப் பதிலாக அந்தப் பணத்தை விட்டுக்கொடுப்பது லாபகரமானது என்று சுரங்கத் தொழிலாளர்கள் கருதுவதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாத சுரங்க அனுமதி வைத்திருப்பவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், திரிவானா ஏற்றுமதி குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திரிவாண மற்றும் பளிங்கு (Clear Quartz) சட்டவிரோத கடத்தல் மேற்கொள்ளப்படுவதாகவும், பணியகத்திற்குள் உள்ள சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பளிங்குகளின் ஏற்றுமதியை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் கீழ் வைத்திருப்பதன் மூலம் மற்ற திரிவானாக்களை சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டியது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கடந்த கால வரலாற்றில் சட்ட விதிகளின்படி சரியான திட்டத்தின்படி செயற்படாத ஒரு நிறுவனம் என்பதை விசாரணைகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் குழு சுட்டிக்காட்டியது. தற்போதுள்ளதை விட அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பெரிய தேசிய பணியைச் செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக, சரியான தொலைநோக்குடன் கூடிய முறையான திட்டத்தின்படி இந்நிறுவகம் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதன்படி, கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை கோப் குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹுமான், சமிந்த விஜேசிறி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான மற்றும் சமிந்த ஹெட்டிஆரச்சி ஆகியோரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித்த உடுவலவ, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


