தமக்கென ஓரிடம் - அழகான வாழ்க்கை" தேசிய திட்டத்தின் கீழ் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

தமக்கென ஓரிடம் - அழகான வாழ்க்கை" தேசிய திட்டத்தின் கீழ் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
  • :
தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "தமக்கென ஓரிடம் - அழகான வாழ்க்கை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சொந்தமாக வீடொன்றை அமைத்துக் கொள்ள, எவ்வித நிதி வசதியுமற்ற வறிய குடும்பங்களுக்காக நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த வீடுகளை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் தேசிய அளவிலான செயற்திட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

 இதற்கு இணையாக, புத்தளம் மாவட்டத்தின் பல்லம மற்றும் ஆராய்ச்சிச்சிகட்டுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட நான்கு குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (18) நடைபெற்றது.

புத்தளம் மாவட்டத்தில் பிரதேச மட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளில், பணிகள் நிறைவடைந்த வீடுகள் கட்டம் கட்டமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு வருவதாகவும், புதிதாக இனங்காணப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு வரும் ஏனைய வீடுகள் இவ்வருட இறுதிக்குள் பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் அபயரத்ன தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட கிராம மட்டத்திலான அதிகாரிகளைக் கொண்ட கிராமியக் குழுக்களினால் தெரிவு செய்யப்பட்டு, பிரதேச செயலாளர்களின் பரிந்துரையைப் பெற்ற, வீடற்ற, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களே இத்திட்டத்தின் பயனாளிகளாகக் கருதப்படுவர்.
 
இந்நிகழ்வில் ஆனமடுவ பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டார, உப தலைவர் இமல்க டில்ஷான், பிரதேச சபை உறுப்பினர் சகுன் மஞ்சநாயக்க, ஆராய்ச்சிச்சிகட்டுவ பிரதேச சபையின் தலைவர் ஜயரத்ன ஜயசேகர, பிரதேச சபை உறுப்பினர் நிலான் தனுஷ்க, பல்லம பிரதேச செயலாளர் மற்றும் பல்லம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles