தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அதிக விலைக்கான கேள்விப்பத்திரத்தை முன்வைத்துள்ளது – கோப் உப குழுவில் தெரியவந்தது
🔸 ஸ்மார்ட் யூத் கண்காட்சி உள்ளிட்ட தொடர் திட்டங்கள், மதிப்பாய்வு அறிக்கையின் பின்னர் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவர் கூறியபோதும் அவ்வாறான மதிப்பாய்வு அறிக்கைகள் எதுவும் மன்றத்தில் இல்லை – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் தெரிவிப்பு
🔸 அமைச்சரவைத் தீர்மானத்தைக் கவனத்தில் எடுக்காது, அரசியல் காரணங்களின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த அதிகாரிகளுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுத்த 3 குழுக்கள் குறித்து முழுமையான அறிக்கையை வழங்கவும் – கோப் உப குழு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து, இளைஞர் சேவைகள் மன்றத்திற்கே கேள்விப்பத்திரங்களை முன்வைக்கும்போது அதிக விலையை வழங்கியுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) உபகுழுவில் தெரியவந்தது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2025 பெப்ரவரி 18 மற்றும் 20ஆம் திகதிகளில் கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் நியமிக்கப்பட்ட உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தலைமையில் கடந்த 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது.
ஸ்மார்ட் யூத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் குதிரைப் பந்தயத் திடலில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்பில் காணப்படும் சகல வீடியோ பதிவுகளையும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் தலைவர் பசிந்து குணவர்த்தனவுக்கு வழங்கிய அறிவுறுத்தல் குறித்தும் உபகுழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர். இதற்காக 120 இலட்சம் ரூபா குறித்த வீடியோ தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கியமை குறித்தும் குழு நீண்ட நேரம் கவனம் செலுத்தியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யூத் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தர் என்ற ரீதியில் அதிக விலையில் குறித்த கேள்விப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, பிறிதொரு நிறுவனத்திற்கு அதனை வழங்கியிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஸ்மார்ட் யூத் கண்காட்சி உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சித் திட்டங்கள் மதிப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக் கொண்ட பின்னரே முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவர் தெரிவித்திருந்த போதும், அவ்வாறான மதிப்பாய்வு அறிக்கையொன்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திடம் இல்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், ஸ்மார்ட் யூத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாகவும், இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் சுயாதீன விசாரணையொன்று மேற்கொண்டு மூன்று மாதத்திற்குள் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விசாரணையொன்றை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
அத்துடன், அரசியல் காரணங்களுக்காகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 40 அதிகாரிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்குமாறு வழங்கிய அமைச்சரவைத் தீர்மானத்தைக் கவனத்தில் எடுக்காது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வேறு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு நஷ்டஈடு வழங்கப்பட்டமை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, இவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்ட அதிகாரிகள், வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை, பதவி உயர்வு வழங்கப்பட்ட திகதி, நஷ்டஈடு வழங்கப்பட்ட திகதி, அனுமதி வழங்கப்பட்ட திகதி, தீர்ப்பு வழங்கிய அதிகாரிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு, கோப் உப குழு அறிவுறுத்தல் வழங்கியது.
மேலும், வரையறுக்கப்பட்ட இலங்கை தேசிய இளைஞர் சேவை கூட்டுறவு சம்மேளனத்தினால் (NYSCO) வழங்கப்பட்ட டிப்ளோமா தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்தும் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. NYSCO ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த டிப்ளோமாவுக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பது இங்கு தெரியவந்தது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர், NYSCO நிறுவனம் தற்பொழுது இளைஞர் சேவைகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், NYSCO இற்கான பொது முகாமையாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வயதுக் கட்டுப்பாடு 35 ஆக இருந்தபோதிலும் அந்த வயது எல்லை தற்பொழுது 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பெயரை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய குழுத் தலைவர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான முடிவுகளை எடுக்குமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார். NYSCO இன் முக்கிய அதிகாரிகளை அழைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறும் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்தும், கணக்காய்வு மற்றும் நிர்வாகக் குழுவை உரிய முறையில் நடத்துவது குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ண, அசித நிரோஷன எகொட விதான, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்