டெங்கு விழிப்புணர்வு வாரம் மே 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

டெங்கு விழிப்புணர்வு வாரம் மே 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு
  • :
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (19.05.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முந்தைய இரு வருடங்களிலும் டெங்கு நோய் இறப்புகள் காணப்படவில்லை எனவும், அதற்கு முந்திய வருடங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் நோய் தாக்கம் அதிகரித்து காணப்படாதவகையில் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தலில் வினைத்திறனான செயற்பட்டு வரும் சுகாதாரத்துறையினர், உள்ளூராட்சி துறையினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தற்போது மழை பெய்துவருவதால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக்கூறி அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும் டித்வா புயல் பல்வேறுபட்ட சூழ்நிலை ஏற்பட்ட போதும் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலகங்கள் ஒருங்கிணைந்த வகையிலே வினைத்திறனாக செயற்பட்டதன் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடியதாக இருந்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், காலநிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்யாத காலத்திலும் மழை வீழ்ச்சியை பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் டெங்கு நோய் ஏற்படக்கூடிய தாக்கம் இருப்பதால் இனிவரும் காலங்களில் அதற்கு முன்னேற்பாடாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாடசாலைகள், ஏனைய இடங்களிலும் கௌரவ உள்ளூராட்சி மன்ற கெளரவ தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள் இணைந்த வகையில் செயற்பட்டு அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
 
01.சனாதிபதி செயலகத்தினால் நாடு முழுவதும் கடற்கரையோரங்களை துப்பரவாக்குதல் பணி எதிர்வரும் மே 23 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதால் பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலக ரீதியாக இச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டது.
02.நாவாந்துறை பகுதியில் பழைய இரும்புகள் போடப்பட்டு மழைநீர் தேங்கி டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தடுப்பதற்கு கெளரவ மாநகரசபை முதல்வர் ஊடாக நடவடிக்கை எடுப்பது என அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
 
03.டெங்கு விழிப்புணர்வு வாரத்தினைஇம் மாதம் - மே 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் 25 ஆம் திகதி பொதுமக்கள் சிரமதானத்தினை மேற்கொள்ளுதல் , 26 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், 27 ஆம் திகதி தனியார், வர்த்தக நிலையங்களிலும் கள ஆய்வுகள் மற்றும் சிரமதானங்களை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், டெங்கு தாக்கம் அதிகமாக காணப்படும் கரவெட்டி, யாழ்ப்பாணம், பருத்துத்துறை, கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலகங்களில் டெங்கு வாரத்தினை பின்னர் யூன் மாதம் 08 ஆம் திகதி இதே செயற்பாட்டை மீண்டும் பின்பற்றுமாறு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
 
04.யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்யாத முதியோர் இல்லங்களைபதிவு செய்யுமாறு பல தடவை குறிப்பிட்டும் இன்னமும் பதிவு செய்யாத இல்லங்கள் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறும் பதிவு செய்யாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது

Related Articles